கல

கலிநிலைத்துறை

5344.

          அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்
          இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல்
          எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன்
          செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ.

உரை:

     சிவந்த நிறத்தை யுடைய சபையின்கண் பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானே! உனக்கு அன்பராயினோர் எல்லோரும் நின் திருவடி நிழலில் அமர்ந்து இருக்கின்றார்கள்; இவ்வுலகில் நீதானும் என்பால் இரங்கி அருளாவிடில் யான் எங்கே போவேன்; எவரிடத்து நின் குறையைச் சொல்லி வருந்துவேன்; வேறு யாது செய்வேன். எ.று.

     அங்கு என்றது சிவனுடைய மோக நிழல். அமர்தல் - மகிழ்ந்திருத்தல். திருவடி நிழலன்றி வேறு தமக்குப் போக்கிடம் இல்லை என்பாராய், “எங்கே போவேன்” என்றும், “எது செய்வேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். செங்கேழ் வேணி - சிவந்த நிறத்தையுடைய சடை. திங்கள் - பிறைச்சந்திரன்.

     (49)