5345.

          ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின்
          சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம்
          காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
          தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ.

உரை:

     தீயோடு ஒக்கும் திருமிக்க அருள் வடிவுடைய சிவ பெருமானே! ஈக்கு நிகராக இருக்கும் சிறியவனாகிய என்னிடத்தில் உன்னுடைய மகனாகிய முருகனோடு ஒக்கும் பெரிய அருளுருவாகிய திருவுள்ளம் எனக்குக் காயோ பழமோ; யாதோ; தெரியாமல் வருந்துகின்றேன். எ.று.

     தமது சிறுமையும் புன்மையும் வெளிப்படுத்தற்கு, “ஈயோடு உறழும் சிறியேன்” என்றும், அருளின் பெருமையை உணர்த்தற்கு, “சேயோடு உறழும் பேரருள்” என்று கூறுகின்றார். நின் திருவுள்ளம் எனக்கு அருள் புரியத் தடை செய்யுமோ அன்றி தடையின்றி அருள் புரியுமோ என்பாராய், “காயோ பழமோ யாதோ அறியேன்” என்று கட்டுரைக்கின்றார். சிவனுடைய அருளுருவம் தீயின் நிறத்தையுடையது என்பது பற்றி, “தீயோடு உறழும் திருவருள் வடிவச் சிவனே” என்று தெரிவிக்கின்றார்.

     (50)