அறுச
அறுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5346. உடைய நாயகன் பிள்ளைநான்
ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
அடைய நான்அருட் சோதிபெற்
றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
மிடைய அற்புதப் பெருஞ்செயல்
நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
தடைய தற்றநல் தருணம்இத்
தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.
உரை: எல்லாம் உடைய நாயகனாகிய சிவனுக்கு நான் பிள்ளையாயின் எல்லா உலகங்களும் ஒருங்கே இன்பமுற நான் அருள் ஞானமாகிய சோதியைப் பெற்று அழிவில்லாத தேகத்தைக் கொண்டு உலகெல்லாம் நிறைந்த அற்புதமான பெருஞ் செயல்களை நாள்தோறும் செய்து எங்கும் உலவுதற்குத் தடை சிறிதுமில்லாத நல்ல சமயம் இதுவாகத் தனியவனாகிய எனக்குத் தழைக்குமாறு அருளுவாயாக. எ.று.
உலகங்களை உடைமையாகவும் உயிர்களைத் தனக்கு அடிமையாகவும் உடைய தலைவனாதலால் சிவனை, “உடைய நாயகன்” என்று உரைக்கின்றார். திருவருள் ஞானமும் மூத்துக் கெடுதலில்லாத தேகமும் கொண்டாலன்றி உலகெங்கும் அற்புதச் செயல்களைச் செய்ய இயலாதென்பது பற்றி, “அருட் சோதி பெற்று அழிவிலா யாக்கை கொண்டு உலகெல்லாம் விடைய” என்று விளம்புகின்றார். விடைதல் - நெருங்குதல். தழைத்தல் - உண்டாதல். (51)
|