5347.

     கோது கொடுத்த மனச்சிறியேன்
          குற்றம் குணமாக் கொண்டேஇப்
     போது கொடுத்த நின்அருளாம்
          பொருளை நினைக்கும் போதெல்லாம்
     தாது கொடுத்த பெருங்களிப்பும்
          சாலா தென்றால் சாமிநினக்
     கேது கொடுப்பேன் கேட்பதன்முன்
          எல்லாம் கொடுக்க வல்லாயே.

உரை:

     குற்றம் பொருந்திய மனத்தையுடைய சிறியவனாகிய என் குற்றங்களைக் குணமாகக் கொண்டு இப்போது நீ கொடுத்த திருவருளாகிய பொருளை நினைக்கும்போதெல்லாம் இவ்வுடம்பால் உளதாகிய பெரிய மகிழ்ச்சியும் நிரம்பாது என்பேனாயின், சுவாமியாகிய தலைவனே, நீ கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லவனாதலால் நினக்கு யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     கோது - குற்றம். இறைவன் அருளிய திருவருள் ஞானமாகிய பொருளால் தன்னுடைய குற்றங்கள் எல்லாவற்றையும் போக்கிக் குணமாகக் கொண்டமை புலப்படுத்தலின், “குற்றம் குணமாக் கொண்டே இப்போது கொடுத்த நின் அருளாம் பொருள்” என்று புகல்கின்றார். தாது - உடம்பு. சாலாது - நிரம்பாது; ஒவ்வாது என்றலும் உண்டு.

     (52)