5348. கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும்
அன்பரெலாம் காணக் காட்டும்
என்றுடைய நாயகனே எல்லாஞ்செய்
வல்லவனே இலங்குஞ் சோதி
மன்றுடைய மணவாளா மன்னவனே
என்னிருகண் மணியே நின்னை
அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல்
ஆணைஉன்மேல் ஆணை ஐயா.
உரை: கன்றையுடைய பசுவைப் போல உள்ளம் கனிந்துருகும் அன்பர்கள் எல்லாரும் கண்டு மகிழக் காட்டி அருளும் என்னை எந்நாளும் ஆளாகவுடைய தலைவனே! எல்லாம் செயல் வல்லவனே! விளங்குகின்ற சோதியை யுடைய அம்பலத்தின்கண் எழுந்தருளும் மணவாளனே! அருளரசே! என்னுடைய இரண்டு கண்ணின் மணி போல்பவனே! உன்னை அன்றும் நான் தலைவனாக உடையேன்; இன்றும் அக்கொள்கையைக் கைவிடேன்; இது உன் மேல் ஆணையாகச் சொல்வதாம். எ.று.
அன்பரது அன்பின் திறத்தை, பசு தான் ஈன்ற கன்றின்பால் செலுத்தும் அன்புக்கு எடுத்துக் கூறுகின்றார். மெய்யன்பர்களுக்குத் தன்னுடைய ஞானத் திருவுருவைக் காட்டி அருளுபவனாதலால், “அன்பர் எலாம் காணக் காட்டும் நாயகனே” என்று இயம்புகின்றார். என்றும் என்பது என்று என வந்தது. ஞான ஒளி திகழும் அம்பலமாதலின் அதனை, “இலங்கும் சோதி மன்று” என்று போற்றுகின்றார். சிறு பருவத்தேயே உன்னை எனக்குத் தலைவனாகக் கொண்டேன் என்பார், “நின்னை அன்றுடையேன்” என்று கூறுகின்றார். உன்மேல் ஆணை என அடுக்கிக் கூறியது தமது கருத்தை வற்புறுத்தற்காகும். (53)
|