5349.

     திருநி லைத்துநல் அருளொடும் அன்பொடும்
          சிறப்பொடும் செழித்தோங்க
     உருநி லைத்திவண் மகிழ்வொடு
          வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய்
     இருநி லத்தவர் இன்புறத்
          திருவருள் இயல்வடி வொடுமன்றில்
     குருநி லைத்தசற் குருஎனும்
          இறைவநின் குரைகழற் பதம் போற்றி.

உரை:

     செல்வம் நிலைபெற, உயிர்கள்பால் செய்யும் அருளும் அன்பும் சிறப்பும் மிகுந்து ஓங்க, உடம்பும் நிலைபெற, இவ்வுலகில் மகிழ்ச்சியோடு வாழத் திருவுள்ளம் உவந்து எனக்கு உன் திருவருளைச் செய்வாயாக; பெரிய இம்மண்ணுலகத்தவர் இன்பம் எய்துமாறு அருளுருவாய் இயன்ற அழகிய உருக்கொண்டு அம்பலத்தில் குருவாம் தன்மை பொருந்திய சற்குரு எனப்படும் இறைவனே! நின்னுடைய ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியைப் போற்றுகின்றேன். எ.று.

     நிலையாமை செல்வத்தின் இயல்பாதலின், “திருநிலைத்து” என்று எடுத்தோதுகின்றார். அருளும் அன்பும் முதலாயின செல்வம் இருந்தாலன்றி நலம் சிறவாவாதலால், “அருளொடும் அன்பொடும் செழித்தோங்க” என்று கூறுகின்றார். உரு - உடம்பு. உடம்பும் நிலையான இயல்பிலதாகையால், “உரு நிலைத்து” என்று உரைக்கின்றார். அம்பலத்தில் கூத்தப் பெருமான் அருளுருக் கொண்டு எழுந்தருளுவது மண்ணுலகத்தவர் கண்டு மகிழ்வதற்காக எனத் தெரிவிப்பாராய், “இருநிலத்தவர் இன்புற” என்றும், மக்கள் ஞானப் பேற்றுக்குத் தகுதி உடையவராகிய வழி இறைவன் ஞான குருவாய் எழுந்தருளி ஞானம் அருளுகின்றார் என்ற சைவ நூல் கருத்து விளங்க, “குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ” என்றும் உரைக்கின்றார். உரைகழல் - ஒலிக்கின்ற வீரகண்டை என்னும் காலில் அணியும் ஆபரணம். பதம் - திருவடி.

     (54)