5350. குற்றம் புரிதல் எனக்கியல்பே
குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
சிற்றம் பலவா இனிச்சிறியேன்
செப்பும் முகமன் யாதுளது
தெற்றென் றடியேன் சிந்தைதனைத்
தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
இற்றைப் பொழுதே அருட்சோதி
ஈக தருணம் இதுவாமே.
உரை: திருச்சிற்றம்பலத்தில் உள்ள இறைவனே! குற்றங்களைச் செய்வது எனக்கு இயல்பாகும்; என் குற்றங்களை உயிர்க்குணம் என்று கொண்டு பொறுத்தருளுதல் உனக்கு இயற்கையாகும்; இந்நிலையில் சிறியவன் ஆகிய நான் சொல்ல வல்ல முகமன் யாதாம்; தெளிவெய்தும் படி அடியேனுடைய மனத்தைத் தெளியச் செய்து அதனுள் நிறைந்துள்ள அச்சங்களையும் வருத்தங்களையும் போக்கி இன்றே எனக்கு உன் திருவருள் ஞானத்தைத் தந்தருளுக; அதற்கு இது தக்க தருணமாம். எ.று.
மலக்கலப்பால் உயிர்கட்குக் குற்றம் புரிவது இயற்கையாக இருத்தலால், “குற்றம் புரிதல் எனக்கு இயல்பே” என்றும், குணமே இயற்கை வடிவுடையவனாதலால், “குணமாக் கொள்ளல் உனக்கியல்பே” என்றும் சிவனிடம் முறையிடுகின்றார். முகமன் - அன்பு மொழி. தெற்றென்று - தெளிவாக மனத்தைத் தூய்மை செய்து அச்சம் அவலம் முதலிய அழுக்குகளைப் போக்கினாலன்றித் திருவருள் ஞானமாகிய அருட்சோதியை வழங்குதல் இன்மையின், “அடியேன் சிந்தைதனைத் தெளிவித்து அச்சம் துயர் தீர்த்து அருட்சோதி ஈக” என்று வேண்டுகின்றார். மனத் தெளிவு நீங்குதற்கு முன் அருள் ஞானம் வழங்குதல் வேண்டும் எனப் புகல்வாராய், “இற்றைப் பொழுதே” என்றும், “தருணம் இதுவாம்” என்றும் எடுத்தோதுகின்றார். துயர் - அவலம். தருணம் - சமயம். (55)
|