5351. அருளார் அமுதே என்னுடைய
அன்பே என்றன் அறிவேஎன்
பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப்
புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
தெருளாம் ஒளியே வெளியாகச்
சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
இருளா யினஎல் லாம்தவிர்த்தென்
எண்ணம் முடிப்பாய் இப்போதே.
உரை: திருவருளாகிய அரிய அமுதமே! என்னுடைய அன்புருவாகியவனே! எனக்கு அறிவாகியவனே! என்னுடைய பொருளாய் அகத்திலும் புறத்திலும் என்னைக் கலந்துகொண்ட கருணை மலையே! மெய்ம்மையாகத் தெருண்ட ஒளிப் பொருளே! ஞான வெளியாகத் திருச்சிற்றம்பலத்தில் நடிக்கின்றவனே! இருளாகிய என் குற்றம் எல்லாம் போக்கி இப்போதே என் எண்ணங்களை முடித்தருளுக. எ.று.
என்னுடைய சிறந்த பொருளாய் என்னுட் கலந்து அகத்திலும் புறத்திலும் இருந்து அருளுவது என்பது விளங்க, “அகத்தும் புறத்தும் என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பே” என்று போற்றுகின்றார். மெய்ம்மையால் தெளிந்த ஒளிப் பொருளாக விளங்குவது தோன்ற, “மெய்த் தெருளாம் ஒளியே” என்று விளம்புகின்றார். சிதாகாசப் பெருவெளியை, “வெளி” என்று சிறப்பிக்கின்றார். மலத்தால் மறைக்கப் படுதலின் குற்றங்கள் அனைத்தையும் தொகுத்து, “இருளாயின எல்லாம்” என்று இயம்புகின்றார். முடித்தல் - நிறைவேறச் செய்தல். (56)
|