5352. மந்திரம் அறியேன் மற்றை மணிமருந் தறியேன் வேறு
தந்திரம் அறியேன் எந்தத் தகவுகொண் டடைவேன் எந்தாய்
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச்
சந்திரன் ஆட இன்பத் தனிநடம் புரியும் தேவே.
உரை: எந்தையே! இந்திரன் முதலிய தேவர்கள் வணங்கி நிற்கப் பொன்னம்பலத்தில் சடையில் தங்கிய பிறைச்சந்திரன் ஆட இன்பமார்ந்த ஒப்பற்ற நடம் புரியும் தேவனே! எளியனாகிய நான் மந்திரமோ மணியோ மருந்தோ ஒன்றும் அறியேன்; வேறு சாத்திரங்களும் அறியேன்; ஆதலால் என்ன தகைமை கொண்டு உன் திருவடியை அடைவேன். எ.று.
மந்திரம் - வேத மந்திரங்கள். மற்றை மணி என்றது - வேத மந்திரங்களுக்கு வேறாகிய உருத்திர அக்குமணி. மருந்து - திருநீறு. ஈண்டுத் தத்தமக்குரிய மந்திரம் முதலியன தத்தமக்குரிய சிறப்பு மிக நின்றன. தந்திரம் - சிவாகமங்கள். இவை வேத மந்திரங்களின் வேறாதல் பற்றி, “வேறு தந்திரம்” எனப் பிரித்துரைக்கின்றார். தகவு - தகைமை. மணி, மருந்து, மந்திரங்களின் வேறாம் சிறப்புடைமை பற்றி, “எந்தத் தகவு கொண்டு அடைவேன்” என விண்ணப்பிக்கின்றார். பொன் மன்று - பொன்னம்பலம். வேணிச் சடை - சிவபெருமான் பொன்னம்பலத்தில் ஆடல் புரிகின்றபோது அவனது தேகமே அன்றித் திருமுடியில் விளங்கும் செஞ்சடை ஆட, அதன்கண் தஞ்சம் புகுந்து தங்கியிருக்கின்ற பிறைச் சந்திரனும் ஆடுதல் பற்றி, “வேணிச் சந்திரன் ஆட” என்றும், அந்த ஆட்டத்தால் உயிர்கள் அனைத்தும் இன்புறுவது பற்றி, “இன்பத் தனிநடம் புரியும் தேவே” என்றும் சிறப்பித்துரைக்கின்றார். (57)
|