5353.

கருணைக் கடலே அதில்எழுந்த கருணை அமுதே கனியமுதில்
     தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
     தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள்
                                        தெரித்தருளே.

உரை:

     கருணையாகிய கடல் போன்றவனே! அக்கடலில் எழுந்ததாகிய கருணை அமுதாகியவனே! கனிந்த அவ்வமுதின் இளஞ் சுவையே! சுவை யாவும் சேர்ந்துள்ள சிவபதமே! தற்பதமே! பொருள் வகையால் மெய்ம்மையாகிய பரம்பொருளே! சிதம்பரமாகிய அம்பலத்தில் நடித்தருளும் பரம்பரமே! தெருட்சி மிகுந்த மெய்ம்மை பொருந்திய கருத்திற் கலந்துகொண்டு எனக்கும் நின்னுடைய சித்தி நிலைகளைத் தெரிவித்தருளுக. எ.று.

     பாற்கடலில் எழுந்த அமுது போல் கருணையாகிய கடலில் எழுந்த அமுதமாகியவன் என்பது விளங்க, “கருணைக் கடலே அதில் எழுந்த கருணை அமுதே” என்று கட்டுரைக்கின்றார். தருணச் சுவை - இளஞ்சுவை. தற்பதம் - தானே தனக்கு நிகராகிய சிவபதம். சிவபரம் பொருள் எல்லாப் பொருட்கும் மேலாயது என்றற்கு, “பொருள் மெய்ப்பரமே” என விளம்புகின்றார். சிதம்பரம் சித் அம்பரம் எனப் பிரிந்து ஞானாகாசம் எனப் பொருள்படும். தெளிவுடைய மெய்ஞ்ஞானிகளின் மெய்ம்மை நிறைந்த உள்ளத்தில் இருந்து கன்ம யோக ஞான சித்திகளைத் தெரிவிப்பனவாதலால் பரசிவத்தை, “தெருள் மெய்க் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே” என்று கூறுகின்றார். எனக்கும் எனற்பாலது எனையும் என வந்தது. கன்ம சித்தி, யோக சித்தி, ஞான சித்தி என்ற மூன்றும் “சித்தி நிலைகள்” எனப்படுகின்றன.

     (58)