5354. கலக்கம் அற்றுநான் நின்றனைப் பாடியே களிக்கின்ற நாள்எந்நாள்
இலக்கம் உற்றறிந் திடஅருள் புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண்
துலக்க முற்றசிற் றம்பலத் தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே
அலக்கண் அற்றிடத் திருவருள் புரியும்என் அப்பனே அடியேற்கே.
உரை: உலகுயிர்கள் ஒடுங்கும் இரவின்கண் விளக்கமுறத் திருச்சிற்றம்பலத்தில் ஆடுகின்ற மெய்ம்மையான சிவசோதிப் பொருளே! சுகமெல்லாம் தருகின்ற வாழ்வானவனே! எந்தையே! துன்பமெல்லாம் நீங்குமாறு திருவருள் புரிகின்ற எனக்கு அடியவனாகிய என் அப்பனே! கலக்கமெல்லாம் தீர்ந்து நான் உன்னையே பாடி மகிழ்கின்ற நந்நாள் எந்நாளோ? அதுவே குறிக்கோளாகக் கொண்டு உன்னை நான் அறிந்துகொள்ளத் திருவருள் புரிவாயாக. எ.று.
கலக்கம் - காம வெகுளி மயக்கங்களால் உண்டாகும் மனக் கலக்கங்கள். இலக்கம் - குறிக்கோள். படைத்தல் முதலிய தொழில்களுள் ஒன்றாகிய உலகுயிர்களை ஒடுக்கும் தொழில் நிகழும் காலம் இருளிரவு என்றும், அக்காலத்தே புணருபவைப் பொருட்டு இறைவன் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடுவான் என்று பெரியோர் கூறுதலால், “இவ்விரவின்கண் துலக்கமுற்ற சிற்றம்பலத்து ஆடும் மெய்ச்சோதியே” என்று உரைக்கின்றார். அலக்கண் - துன்பம். அஃதாவது, பிறந்திறந்து உழலும் துன்பம். (59)
|