கட

கட்டளைக் கலிப்பா

5355.

     பண்டு நின்திருப் பாதம லரையே
          பாடி யாடிய பத்திமை யோரைப்போல்
     தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான்
          துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல்
     குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர்
          குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன்
     கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக்
          குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே.

உரை:

     முற்காலத்தில் உன்னுடைய திருவடித் தாமரைகளையே குறிக்கொண்டு பாடியும் ஆடியும் மகிழ்ந்து பத்தி பண்ணிய சிவத் தொண்டர்களை ஆண்டுகொண்டது போல என்னையும் ஆண்டு கொண்டருளினாய்; இக்காலத்தில் என்னைத் துஷ்டன் என்று நீக்குவது நன்றன்று; ஆழ்ந்த நீர் நிறைந்த கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ளவர்கள் ஒருவர் ஆயிரம் கோடி குற்றம் செய்தாலும் அவரை முன்னர் ஆட்கொண்டு பின்னர் அவர்பால் குற்றமும் குலமும் பேசுவதில்லை காண்; ஆதலால் எண்வகைக் குணங்களும் நிறைந்த வள்ளலாகிய நீ என்னை குறிக்கொண்டு ஏற்றருளுவாயாக. எ.று.

     பண்டு நின் திருப்பாத மலரையே பாடி ஆடிய பத்திமையோர் என்றது முற்காலத்தில் விளங்கிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், திருவாதவூரடிகள் என்ற நால்வரையுமாம். தொண்டு - அடிமை. துட்டன் என்பது தீய குணங்களை உடையவன் என்று பொருள்படுவது. இது துஷ்டன் என்னும் சொல்லின் திரிபு. துரத்திடல் - வேறுபடுத்திப் போக்குதல். நன்று கொல் என்பது நன்றன்று என்ற குறிப்பில் வந்தது. குண்டு நீர்க்கடல் - ஆழமான நீர் நிறைந்த கடல். கொண்டு குலம் பேசுதல் என்னும் வழக்குரை ஒருவரைக் குற்றம் நோக்காது தழுவிக்கொண்டு பின்னர்க் குலத்தாலும் குணத்தாலும் குற்றமுடையவன் என்று அவரை விலக்குதல் கூடாது என்பது உணர நின்றது. பண்டு ஆட்கொள்ளப்பட்ட நால்வரைப் போல என்னையும் ஆட்கொண்டருளுக என வேண்டுகின்றாராதலின், “எனைக் குறிக்கொள்” என உரைக்கின்றார்.

     (60)