எ
எழுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5356. கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக்
கருணைமா மழைபொழி முகிலே
விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள்
மேவிய மெய்ம்மையே மன்றுள்
எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே
இன்றுநீ ஏழையேன் மனத்துப்
புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப்
புகுந்தென துளங்கலந் தருளே.
உரை: இடமெல்லாம் நிறைய பெரிய ஒளியைப் பரப்பிக் கருணையாகிய பெரிய மழையைப் பொழிகின்ற மேகம் போன்றவனே! விண்ணுலகம் எல்லாம் நிறைந்த விளக்கமாகிய பொருளே! என் உள்ளத்தில் பொருந்திய மெய்ம்மையாகிய ஒளியே! அம்பலத்தின்கண் எண்ணுவார் எண்ணுகின்ற எண்ணமெல்லாம் கடந்து விளங்குகின்ற பதிப்பொருளே! இப்பொழுது ஏழையாகிய என்னுடைய மனத்தின்கண் துன்பங்களால் உண்டாகிய புண்ணெல்லாம் நீக்கி வேண்டும் பொருள் எல்லாவற்றையும் கொடுத்து எனது உள்ளத்தில் இருந்து கலந்தருளுவாயாக. எ.று.
மேலே விண்ணுலகத்தைக் கூறுதலால் கண்ணெலாம் நிரம்ப என்பதற்கு மண்ணுலகத்தின்கண் இடமெல்லாம் நிறைய என்று பொருள் கூறப்பட்டது. கருணைப் பொழியும் மேகம் எனக் கூறுதலால், பேரொளி என்றது அருளொளி என உணர்க. மெய்ம்மையும் ஒளியாதலின் தமது உள்ளத்தில் பரவும் ஞான ஒளியை விதந்து, “என்னுள் மேவிய மெய்ம்மையே” என்று விளம்புகின்றார். எண்ணும் எண்ணங்களுக்கு எல்லை இல்லையாதலின், “எண்ணங்களால் கடந்து இலங்கிய பதியே” என்று கூறுகின்றார். எண்ணங்களால் மனம் புண்படுதல் இயல்பாதலின், “மனத்துப் புண்ணெலாம் தவிர்த்து” என்றும் இறைவன் கலந்து நின்ற வழிப் புண்கள் நீங்கி இன்பம் பெருகுதலின், “எனது உளங் கலந்தருளே” என்று ஏத்துகின்றார். கலத்தலாவது நினைவில் இருந்தவண்ணமிருத்தல். (61)
|