5357.

     அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்
          அன்றுவந் தாண்டனை அதனால்
     துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச்
          சொல்லினேன் சொல்லிய நானே
     இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ
          எனைஉல கவமதித் திடில்என்
     என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே
          எய்துக விரைந்தென திடத்தே.

உரை:

     அன்பும் அறிவும் இல்லாதவனாயினும் அக்காலத்தே என்பால் வந்து என்னை ஆண்டு கொண்டாய்; ஆதலால் யாரும் இவ்வுலகெல்லாம் அறியும்படி ஒரு துன்பமும் இல்லாதவன் எனச் சொல்லித் திரிந்தேன்; சொன்ன நானே இன்று இன்பம் இல்லாமல் வருந்துகின்றேன் என்று சொல்லுவது அழகாகாது அன்றோ; அது கண்டு என்னை உலகம் அவமதிக்குமாயின் என் செய்வேன்; எனது உடம்பிலே கலந்து கொண்டாயாதலால் எனக்கு வரும் அவமதிப்பு உனக்கும் வரும்; ஆதலால் என்னிடத்தில் நீ விரைந்து வந்தருளுக. எ.று.     

     மெய்யன்பும் நல்லறிவும் என்பால் இல்லாமை கண்டும் என்னை ஆண்டு கொண்டாயாதலால் யான் இவ்வுலகமெல்லாம் அறியுமாறு துன்பம் இல்லாதவன் எனச் சொல்லித் திரிவேனாயினேன் என்பார், “அதனால் துன்பிலேன் என இவ்வுலகு எலாம் அறியச் சொல்லினேன்” எனச் சொல்லுகின்றார். துன்பம் இல்லாதவன் எனச் சொல்லித் திரிந்த எனக்கு இன்பம் இல்லாதொழிவது உனக்கும் அழகாகாது எனக்கும் உலக அவமதிப்பு உண்டாகும்; ஆதலால் என்பால் வந்தருள்க என வேண்டுமாறு புலப்பட, “நினக்கும் வந்திடுமே விரைந்து எனதிடத்தே எய்துக” எனப் புகல்கின்றார். என்பு - எலும்புகளால் ஆகிய உடம்பு.

     (62)