கட

கட்டளைக் கலித்துறை

5358.

     வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளர்அமுதத்
          தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல்
     ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன்
          நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே.

உரை:

     தலைவனே! பெருமை பொருந்திய திருச்சிற்றம்பலத்தே விளக்கமுற்றுப் பெருகுகின்ற சிவஞானாமிர்தமாகிய தேனை விரும்பினேன்; ஆகவே இத்தருணத்தில் அதனை எனக்கு வழங்குக; வழங்காவிடில் ஊனுடம்பை விரும்பி நிற்கும் என் உயிரை நீக்கி நின்மேல் பழி விளைவிப்பேன்; ஆகவே இப்போது நான் வேண்டுமா? விளைவிக்கும் பழி வேண்டுமா? எனக்குச் சொல்லுக. எ.று.

     வான் - பெருமை. தேவர் உலகத்தவர்கள் விரும்புவது பற்றி, “வான் வேண்டு சிற்றம்பலம்” என்று புகழ்கின்றார் எனினும் அமையும். சிவஞானாமிர்தத்தைத் தேன் எனப் பெரியோர் வழங்குதல் பற்றி, “அமுதத் தேன் வேண்டினேன்” எனத் தெரிவிக்கின்றார். ஊன் - ஊனாலாகிய உடம்பு. ஊனுடம்பை விட்டு உயிர் பிரிதற்கு வருந்துவது இயற்கையாதலால், “ஊன் வேண்டும் என் உயிர்” என உரைக்கின்றார். நான் வேண்டுமோ என்றவிடத்து, நான் என்பதற்கு ஊனுடம்போடு கூடியிருக்கும் நான் என்பது பொருள். ஊனுடம்புக்கும் உயிர்க்கும் நாயகன் சிவனாதலின், “நாயகனே” என்று நயந்து உரைக்கின்றார்.

     (63)