எழுசீர்க் கழிநெடிலடி சிரிய விருத்தம்

5359.

     செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
          தேவரும் முனிவரும் பிறரும்
     இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
          எந்தைநின் திருவருள் திறத்தை
     எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
          என்தரத் தியலுவ தேயோ
     ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
          உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே.

உரை:

     செவ்விய மனமுடைய தவயோகிகளும் வேதங்களும் ஆகமங்களும் தேவர்களும் முனிவர்களும் மற்றவர்களும் இந்நிறத்தது இவ்வுருவினது என்று அறிவதற்கரிதாகிய பரம்பொருளாகிய எந்தையே! நின்னுடைய திருவருள் திறத்தை யான் எவ்வாறு அறிவேன்; எவ்விதம் உரைப்பேன்; அது எனது அறிவாற்றலுக்கு அடங்குவதாமோ? எல்லாரும் ஒப்பப் புகழ்கின்ற அருளரசே! எனக்கென்று இவ்வுலகில் தனி உணர்ச்சி உளதோ? நீயே எனக்கு உணர்த்துக. எ.று.

     உணர்த்த உணர்தலின்றி எனக்கெனத் தனியே உணரும் செயலுமுண்டோ? ஒன்றுமில்லை என்பது நீ உணர்ந்ததன்றோ; உளதாயின் உணர்த்தி அருளுக என்பது கருத்து. செவ்வணத்தவர் - செவ்விய மனமும் செயலுமுடைய தவயோகியர். “இன்ன வுரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் தன்ன உருவாம் என மிகுத்தவன்” (வைகா) என்று திருஞானசம்பந்தர் கூறுவது காண்க. அங்ஙனமிருக்க யான் எங்ஙனம் அறிந்து உரைப்பேன் என்பாராய், “நின் திருவருள் திறத்தை எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்” என்றும், என் அறிவாற்றலுக்கு இயலுவதன்று என்பாராய், “என் தரத்து இயலுவதேயோ” என்றும் கூறுகின்றார். உணர்ந்தாரும் ஒப்ப வுணர அரியவன் என்றற்கு, “ஒவ்வணத் தரசு” எனப் புகழ்கின்றார். உணர்த்த உணருவதன்றி யாவற்றையும் முற்றவுணரும் உணர்வு ஆன்மாவாகிய எனக்கில்லை என்பதை வற்புறுத்தற்கு, “எனக்கென இங்கோர் உணர்ச்சியும் உண்டு கொல்” என்று உரைக்கின்றார்.

     (64)