5360. உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா
உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும்
சிவபதத் தலைவநின் இயலைப்
புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து
புகன்றிடும் தரஞ்சிறி துளனோ
கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த
குருஎனக் கூறல்என் குறிப்பே.
உரை: உணரத் தகுவனவற்றை யுணர்ந்தது போல மெய்ப் பொருளாகிய நின்னை நுணுகி உணர்ந்தும் நுணுகி உணர்ந்துணர்ந்த பெரியோர்களது உணர்வுவழி நுழைந்துணர்ந்தும் ஒன்றும் உணராது மயங்கினவராகி உணர்வுடையோர் வியந்து போற்ற விளங்குகின்ற சிவபதத்துக்குத் தலைவனே! நின்னுடைய உண்மைத் தன்மையை நின்னொடு கூடியிருக்கின்ற நின் திருவருள் சத்தி ஒன்றே அறியும்; நான் அறிந்து சொல்லக்கூடிய தன்மை என்பால் சிறிதேனும் உளதோ? ஒரு பொருளைக் கொண்டுவந்து என் கையில் கொடுத்த குருபரன் என்று உன்னைக் கூறுவது என் கருத்தாகும். எ.று.
பொருள்களை நுணுகி நோக்கி அறிந்துணர்வது போல மெய்ப் பொருளாகிய உன்னையும் அறிந்துணராது அறிந்தோர் அறிவுவழி நின்று உணர்ந்தவரும் உண்மை யுணராது மயங்கினர் என்றற்கு, “உணர்ந்துணர்ந்து” என்பது உணர்ந்தோர் உணர்வுமுறையைப் புலப்படுத்துகின்றது. அங்ஙனம் உணர்ந்தோர் உணரும்வழி நின்று உணரலாகாமை கண்டு மயங்கினமை தோன்ற, “உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே திணர்ந்தனர்” என்று உரைக்கின்றார். உணரும் உணர்வுக்கு அகப்படாது உயர்ந்தோங்குவது பற்றி உணர்வுடையோர் வியக்கின்றமையின், “வியந்திட விளங்கும் சிவபதத்தலைவ” என்று போற்றுகின்றார். இவ்வாறு அறிந்தோர் அறியலாகாததாகிய சிவத்தை அதனோடு பிரிவின்றிக் கூடிக் கலந்திருக்கும் திருவருள் சத்தி ஒன்றே அறியுமாதலின், “நின் இயலைப் புணர்ந்த நின் அருளே அறியும்” என்று புகல்கின்றார். இத்தகைய அறிவரிய பொருளை எனக்கு அறிவித்தலால் உன்னை யான் குருபரன் என்று கூறுகின்றேன் எனப் புகழும் கருத்துத் தோன்ற, “கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொளக் கொடுத்த குரு எனக் கூறல் என் குறிப்பு” என்று இயம்புகின்றார். (65)
|