எண

ண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5361.

     அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
          அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்டு
     உயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
          ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
     மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
          மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
     செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
          திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதுங் கிலனே.

உரை:

     மயக்கமில்லாத உயர்ந்தவர் மனத்தின்கண் எழுந்தருளுகின்ற மாணிக்க மணியும் தேவாமுதமும் போல்பவனே! உன்னுடைய திருவடியாகிய தாமரை மலரையன்றி வேறு அயலாக உள்ள எதனையும் அறிவதில்லேன்; அன்றியும் அம்பலத்தின்கண் நாள்தோறும் ஆனந்தக் கூத்தாடல் கண்டு உய்தி பெறும் திறமும் இல்லாதவன்; என்றாலும் அதனைக் கண்ணாரக் கண்டு மகிழும் ஆசை ஒரு கடலன்று எழுகடலோ என உரைக்கமுடியாத அளவு உள்ளத்தில் உடையேன்; பிறைச் சந்திரனை முடியில் அணிந்த எங்கள் பெருமானாகிய உன்னை வாழ்த்துவதன்றி வேறு ஒரு செயலும் இல்லாதவன்; ஆதலால் எனக்கு உன் திருவருள் ஞானத்தை நல்குவதற்குத் திருவுள்ளம் கொள்வாயாக; இது திருவைந்தெழுத்தின் ஆணையாகச் சொல்வது; இவ்வுலகில் எனக்கு ஒரு துணையுமில்லை. எ.று.

     உலகனைத்தும் உலகத்திலுள்ள பொருளனைத்தும் உன் திருவடித் தாமரைக்கு வேறாய் இருந்தும் நான் அவற்றை நோக்குவதில்லை என்பாராய், “அயலறியேன்” என அறிவிக்கின்றார். வேறு உய்தியாவது எப்பொழுதும் ஞானவம்பலத்தின்கண் நிகழ்கின்ற உன்னுடைய திருக்கூத்தைக் கண்டு மகிழ்வது; அதனைத் தானும் நான் அறியேன் என்பாராய், “அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடங் கண்டு உயலறியேன்” என்று கூறுகின்றார். அறியாவிடினும் எனக்கு ஆசை அளவிட ஒண்ணாதது என வற்புறுத்தற்கு, “அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழுகடலோ உரைக்க வொண்ணாது உடையேன்” என உரைக்கின்றார். மயலறியா மனம் - ஞான ஒளி திகழும் உயர்ந்தோர் மனம் சிவாயநம என்ற எழுத்தைந்தினும் வலியது பிறிதில்லை என விளக்குதற்கு, “திருவெழுத்தைந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கிலன்” என்று கூறுகின்றார்.

     (66)