5362.

     கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்
          கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
     தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்
          தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
     எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே
          என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
     அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ
          அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.

உரை:

     கொழுவிய தேனும் செழுமையான பாகும் தெளிவுடைய பசும்பாலும் கலந்துண்டது போல இனிக்க வல்ல குணங்களே உருவாகிய சடை தாங்கிய சிவந்த கனி போல்பவனே! தொழுகின்ற தெய்வ மகளிர்க்குத் தக்கக் கழுத்தில் மங்கல நாண் பொருந்தவும் கடல் விடம் கழுத்தின்கண் விளங்க நிற்கும் சுடர்ப்பொருளாய் ஆகிய சிவனே! தோன்றி மிகுகின்ற அன்பு நிறைந்த தொண்டர் உள்ளத்தில் ஏற்படுகின்ற திருவிளக்காக உள்ளவனே! என் உயிர்க்குத் துணையும் என் இரண்டு கண்ணினுள்ளும் ஒளிர்கின்ற மணியுமாகியவனே! துன்பத்தில் அழுந்தி என்னுடைய அவலம் பொருந்திய நெஞ்சம் கரையேற மாட்டாது வருந்துகின்றது; அந்தோ! உனக்கு நான் அபயம்; ஆதலால் என்னை விரைவாக ஆண்டருளுக. எ.று.

     கொழுந்தேன் - பசுமையான தேன். செழும்பாகு - பக்குவமாகக் காய்ச்சப்பட்ட வெல்லப்பாகு. நினைக்குந்தோறும் இனிமை சுரக்கும் பண்புடைய செஞ்சடைப் பெருமானாதலால் சிவனை, “இனிக்கும் குணங்கொள் சடைக் கனியே” என்று புகழ்கின்றார். கடல் விடத்தை உண்டிராவிட்டால் தேவர்கள் அனைவரும் இறக்க அவர் மனைமகளிர் மங்கலமிழந்து அமங்கலைகளாகி இருப்பார்களாதலால், “தேவ மடந்தையர்க்கு மங்கல நாண் கழுத்தில் தோன்ற நின்ற சுடரே” என்று சொல்லுகின்றார். அன்பால் ஆண்டு ஞானத்தால் உயரும் சிவநேயச் செல்வர்களை, “எழுந்தேறும் அன்பர்” என்று போற்றுகின்றார். என்னுடைய அவலம் பொருந்திய நெஞ்சம் துன்பத்தில் அழுந்திக் கரையேற மாட்டாது வருந்துகின்றதாகையால் எனக்கு அபயம் தந்து அருள் புரிக என்று விண்ணப்பிப்பாராய், “உனக்கு அபயம் எனை விரைந்து ஆண்டருள்க” என வேண்டுகின்றார்.

     (67)