5363.

     என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
          எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
     நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
          நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
     தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
          சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
     பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
          பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.

உரை:

     அருளரசே! என்னால் ஒரு துரும்பையும் அசைக்கவும் எடுக்கவும் முடியாது; நீயோ எல்லாம் செய்ய வல்லவன் என்று எல்லாராலும் புகழப்படுபவன்; நினது திருவருளால் இவ்வுலகில் நான் வாழ்கின்றேன்; நினது திருவருளைப் பெற்று அழியாத மெய்ந்நிலையை எய்துவதற்கு எனக்கு ஒரு சுதந்திரமும் இல்லை; நின்னுடைய எல்லாச் சுதந்திரங்களையும் எனக்கு அருள்கூர்ந்து நல்குதல் வேண்டும்; பின்பொருநாள் அதனைத் தருவோம் என்று இருப்பாயாயின் அதுகாறும் நான் உயிர் தாங்கி இருக்கமாட்டேன்; இதனையும் உன் திருப்பெயர் ஆணையாகச் சொல்லுகின்றேன்; என்னுடைய பெரிய ஆசையும் இதுவேயாகும். எ.று.

     தமது சிறுமையைப் புலப்படுத்தற்கு, “என்னால் ஒரு துரும்பும் அசைத்தெடுக்க முடியாது” என்று கூறுகின்றார். எல்லாம் செயல் வல்ல பெருமானாதலால் அவனை எல்லாராலும் புகழப்படுபவன் என்று எடுத்தோதி அவனால் தாம் வாழ இயலுவது விளங்க, “நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன்” என்று உரைக்கின்றார். உன்னுடைய திருவருளால் மரணமில்லாத பெருவாழ்வை அடைய வேண்டுமாயின் எனக்கென ஓர் உரிமையும் இல்லை; அதனால் உன்னுடைய தற்சுதந்திரத்தை என்பால் அருள்கூர்ந்து நல்குதல் வேண்டும்; நல்காவிடின் நான் உயிர் துறப்பேன் என்பாராய், “நினது சகல சுதந்திரத்தை என்பால் தயவு செயல் வேண்டும்; பின்நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க மாட்டேன்” என வற்புறுத்துகின்றார். பேராணை என்பது வன்முறை தோன்ற நின்றது.

     (68)