5364. இங்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன்
இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே
அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி
அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க
விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து
மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும்
பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த
படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே.
உரை: பசுமையும் செம்மையும் பொன்னிறமும் ஆகிய எல்லா நிறங்களும் கொண்டு விளங்கும் படிக மணி போல் காட்சி தருகின்ற விளக்கு போல்பவனே! அம்பலத்தில் விளங்குகின்ற கூத்தப் பெருமானே! என்னைச் சூழ்ந்துள்ள நாணம் எல்லாவற்றையும் விடுத்து என்னுள் நிலவும் விருப்பம் எல்லாவற்றையும் உரைக்கின்றேன்; இனிச் சிறிதும் பொறுத்திருக்க மாட்டேன்; இவ்வுலகில் இத்தருணத்தில் என்னை யடைந்து என் தன்மை ஆதாரமாக வுள்ள மூலக் குறைகளை வெளிப்படுத்தி என்னை வருத்துகின்ற அச்சங்களைப் போக்கி அருட் சோதியாகிய நினது தனியரசு எங்கும் ஓங்கி விளங்க அதற்குரிய வித்தை யாவும் எனக்களித்து அவிச்சையை உண்டுபண்ணும் மலத்தை நீக்கி மெய்ம்மையாக என்னோடு கலந்து விளங்க வேண்டுகிறேன். எ.று.
இச்சை - விருப்பங்கள். இலச்சை - நாணம்; இது வடமொழியில் லஜ்ஜை என வழங்கும். தரித்தல் - தாங்குதல். அச்சு - குற்றங்களுக்கு மூலாதாரமாகிய நான் எனது என்னும் அடிப்படைக் குற்றங்கள். இச்சை - அறிவு வழி எய்தும் வித்தைகள். அவிச்சை - அஞ்ஞானம். உமையோடு கூடுதலால் பசுமை நிறமும் சிவமாய் நிற்றலால் செம்மை நிறமும் சடை முடியோடு திகழ்தலால் பொன்மை நிறமும் பரசிவத்தின்கண் தோன்றுவது பற்றி, “பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணிவிளக்கே” என்று சிவமூர்த்தத்தைப் பாராட்டுகின்றார். (69)
|