5365. தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான்
ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய
உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்
இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே
அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய்
அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே.
உரை: அருவமும் உருவமுமாகி என் உள்ளத்தில் அமர்ந்தருளிய பெருமானே; எனக்கு அம்மையும் அப்பனுமாய் ஐயனுமாய் விளங்குகின்ற என்னுடைய அருளரசே; எனக்கு அருள் தருதற்கு இது நல்ல தருணமாம்; இத் தருணத்தில் எனக்கு ஒப்பற்ற அருள் ஞானச் சோதியைத் தந்தருள்க; இதுதான் யாம் செய்யும் அருள் வகை; இவ்வகை இல்லை யென்றால் வேறொரு வகை என்று தெரிவித்து என்னுடைய உடலையும் உயிரையும் மகிழ்ச்சியோடு ஒழித்தருளுக; இந்த இருவகையும் எனக்குச் சம்மதமே என்று நின் திருவடி சாட்சியாய் கூறுகின்றேன்; என் மனத்தின் இயல்பை உன் மனம் நன்கு அறிந்ததாகும். எ.று.
அறக்கருணை புரிந்தேனும் மறக்கருணை புரிந்தேனும் உனது அருட் பெருஞ் சோதியை எனக்குத் தந்தருளுக என்று இதனால் வேண்டுகின்றார். மறக் கருணையால் என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக என்று விளக்குகின்றார். அறக் கருணையால் இறைவன் அருட் சோதியை நல்குவன் என்பது வள்ளலார்க்கு நன்கு தெரிந்ததாகலின், “இதில் எனக்கே தனித்த அருட் பெருஞ் சோதி தந்தருள்க” என்று முதற்கண் எடுத்து மொழிகின்றார். அருவம் நான்காகவும் உருவம் நான்காகவும் அன்பர் உள்ளத்தில் இயலுவது அறிந்து, “அருவகையோ உருவகையுமாகி என்னுள் அமர்ந்தாய்” என ஓதுகின்றார். (70)
|