5366. வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு
வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன்
தந்தை நீதரல் சத்தியம் என்றே
குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக்
குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை
செய்க வாழ்கநின் திருவருட் புகழே.
உரை: என்பால் வந்து சேருமுன் அது வந்து விட்டதாகக் கொள்வது எனக்கு வழக்கம்; வள்ளலாகிய நீ மனமுவந்து உனது அருட் சோதியைத் தந்தருளும் அதனைத் தந்துவிட்டாய் என்று இருக்கின்றேன்; தந்தையாகிய நீ தருவது உண்மை என்றே கருதுகின்றேன்; குருபரனாகிய உனது திருமுன் பொய் கூறமாட்டேன்; இனி மண்ணுலகத்தில் எனக்கு எய்துகின்ற மனக் கவலையைத் தாங்க மாட்டேன்; உனது திருமுன் விண்ணப்பம் செய்கின்றேன்; நீ எனக்குக் கருணை புரிவாயாக; நினது திருவருளின் புகழ் என்றும் வாழ்வதாக. எ.று.
ஒரு பொருளைப் பெறுவதற்கு முன் அதனைப் பெற்றதாகக் கருதுவதும் அது என்பால் வருவதற்கு முன் வந்ததாகக் கருதுவதும் குற்றமாயினும் எனக்கு வழக்கமாகிவிட்டது; அதனால் நீ மனமுவந்து அருட் சோதியை வழங்குவதற்கு முன்னே நீ தருவது உறுதியாதலால் வழங்கிவிட்டாய் என்று இறுமாந்திருக்கின்றேன் என்பாராய், “தந்தை நீ தரல் சத்தியம் என்று அருட்சோதி தருமுன் தந்தனை என்றிருக்கின்றேன்” என்று கூறுகின்றார். குருபரனாகிய உன் முன்பு பொய் கூறுவது குற்றமாகலான், “குருமுன் பொய்யுரை கூறலேன்” என்றும், அதற்குக் காரணம் பின்னர் எய்திடும் மனக் கவலையைத் தாங்க மாட்டேன் என்றற்கு, “இனி இக்குவலையத்திடைக் கவலையைத் தரியேன்” என்றும் இயம்புகின்றார். குவலையம் - மண்ணுலகம். (71)
|