5367. வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
நெஞ்சேநீ அஞ்சேல்உன் அஞ்சேல்அஞ் சேலே.
உரை: நெஞ்சமே! வினையாகிய தடைகளை நீக்கி என்னை ஆண்டு கொண்ட மெய்ம்மையாளனும் அழகிய அம்பலத்தில் மெய்ஞ்ஞான திருநடனம் புரிந்து விளங்குகின்ற விமலனும் எல்லாம் செயல்வல்ல சித்துருவானவனும் ஆகிய சிவபெருமான் என்னைத் தனியே வைத்துத் திருவருள் ஞான ஒளியை அளித்து என்னுள்ளே எழுந்தருளி இருக்கின்றான்; அவன் விரும்புகின்ற அருட் சோதியைத் தினையளவு பெற்றவனாயினும் அவர்கட்கு அது போதும்; உலகில் முன்னமே செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று அவர்களை நினைப்பாராயின் நினைத்தவுடன் அவர் அனைவரும் எதிர் வந்து நிற்பார்கள்; ஆகவே நீ இனி அஞ்சுதல் வேண்டா; ஒருகாலும் வேண்டா. எ.று.
செய்வினையால் ஞானம் மறைக்கப்படுவது பற்றி அதனை “வினைத் தடை” என்று விளம்புகின்றார். “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” என்று சிவஞான போதம் கூறுவது காண்க. மணிப் பொது - அழகிய பொன்னம்பலம். இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலால் சிவனை, “விமலன்” என்று கூறுகின்றார். அப்பெருமானுக்கு அருள் ஞான விளக்கம் விருப்பப் பொருளாதல் பற்றி அதனை, “இச்சை அருட் சோதி” என்று கூறுகின்றார். அருட் சோதி பெற்றவர்கள் செத்தவர்களை எழுப்பும் திறம் பெறுதலால் அதனை வற்புறுத்தற்கு, “முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருகென்று நினைத்தவுடன் எதிர் வந்து நிற்பர் கண்டாய்” என்று உரைக்கின்றார். இது கொள்கை யளவில் ஏற்கப் படுவதே அன்றிச் செயலில் நிகழ்ந்ததாக இதுகாறும் காணப்படவில்லை. செத்தவர்கள் இறந்த சேதி புராணங்களில் கூறப்படுவதுபற்றி வடலூர் வள்ளல் இதனை எடுத்தோதுகின்றார் போலும். (72)
|