New Page 2

குறட்டாழிசை

5368.

    அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவருள் அமுதே
    இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம்
    மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே
    அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம்.

உரை:

     உலகங்களுக் கெல்லாம் அழகிய பொருளாய் எனக்கு மெய்யறிவாய் விளங்குபவனே! அம்பலத்தில் விளங்குகின்ற அருளரசே! திருவருள் ஞானமாகிய அமுதத்தை எனக்கு இனிதே தருவாயாக; அதற்கு இது தருணம்; அந்த அமுதத்தைத் தந்தருளுக; இது தருணம்; மாணிக்க மணி போல்பவனே! எனது கண்ணில் விளங்கும் மணியே! அம்பலத்தில் விளங்குகின்ற மதி போல்பவனே! திருவருளாகிய ஞானத்தை எனக்கு அருளுவாயாக; அதற்கு இது தருணம். எ.று.

     மெய்யுணர்வுக்கு மெய்யறிவாய் விளங்குதலின் சிவனை, “எனது மெய்யறிவே” என்று போற்றுகின்றார். திருவருள் ஞானம் அமுத மயமாதலின், “திருவருள் அமுது இனிதருள்வாய்” என்றும், அதற்கு “இது தருணம்” என்றும் காலம் குறித்து வற்புறுத்துகின்றார். மணி-மாணிக்கமணி. திருவருள் ஞானத்தை, “திருவருள் மதி” என்று சிறப்பிக்கின்றார். தருணம் தருணம் என அடுக்கிமொழிந்தது வன்புறை.

     (73)