கல

கலித்துறை

5370.

          ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே
          நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே
          ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்
          சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனிய.

உரை:

     ஆதி முதல்வனே! அழகிய அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற அருளரசே! நீதிகள் யாவும் உருவாக உடையவனே! எல்லாம் செயல் வல்லவனே! நல்லவனே! நின்னையே நினைந்து நூல்களை ஓதி உணர்வதற்கரிதாகிய ஒப்பற்ற பெரிய சோதிப் பொருளே! இப்பொழுது என்னைச் சோதிக்க வேண்டாம் வேண்டாம். எ.று.

     உலகுயிர்களுக்கெல்லாம் மூலமாகிய பரம்பொருளாதலின் சிவனை, “ஆதியே” என்றும், “நீதி பலவும் தன்ன உருவாம் என மிகுத்தவன்” என்று சான்றோர் கூறுவதால், “நீதியே” என்றும் குறிக்கின்றார். வான் சோதி - பெரிய சோதி மயமாகிய பொருள்.

     (75)