கட
கட்டளைக் கலித்துறை
5371. போதோ விடிந்த தருளர சேஎன் பொருட்டுவந்தென்
தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான்
மாதோட நீங்கும் கனிரச மோவந்த கான்கனியின்
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே.
உரை: அருளரசே! அஞ்ஞானமாகிய பொழுது விடிந்தபடியால் என்பொருட்டு வந்தருளி என்னுடைய உடல் தாதுக்கள் எழுமையும் நன்மை தருவனவாக ஓங்குமாறு அருளுக; நினது திருவுள்ளம் பெரிய குற்றங்களைப் போக்கும் ஞானக் கனிரசமோ? அந்த உயர்ந்த கனியின் வடித்தெடுத்த போதோ? நின் திருவுள்ளம் யாதோ? யான் அறிந்திலேனாதலால் எனக்குக் கூறி அருளுக. எ.று.
போது - அஞ்ஞானமாகிய இருள் படிந்த கேவல நிலை. தோல், நரம்பு, தசை, எலும்பு முதலிய எழுவகைத் தாதுக்களையும் தூல உடம்பிற்கு ஆக்காமல் சுத்தமாகிய பொன்னுடம்புக்கு ஆக்குவதுதான் நின் திருவுள்ளத்தில் இயல்பாதல் வேண்டும் என்பாராய், “தாது ஓர் எழுமையும் நன்மையுற்று ஓங்கத் தருவது” என்று கூறுகின்றார். மாதோஷம் என்பது மாதோடம் என வந்தது. வான் கனி - பெருமை பொருந்திய ஞானக்கனி. (76)
|