5372. அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள்
அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை
அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே.
உரை: அந்த ஆண் பனையை பெண் பனையாக்கி முத்துச் சிவிகையில் ஊர்ந்த ஞானசம்பந்தரால் புகழப்படுகின்ற திருநாவுக்கரசராகிய அப்ப மூர்த்திகளும், என் உயிர்க்குயிரான செந்தேனும் அமுதமுமாகிய திருநாவுக்கரசு என்னும் என் தந்தையைக் கல்லொடு பிணித்திட்டுக் கடலில் செலுத்திக் கரையேற விட்டருளிய சிவந்த சடாமுடியை உடைய அப்பனும், சிற்றம்பலத்தில் எழுந்தருளுபவனுமாகிய சிவபெருமானைப் போற்றி அன்பால் ஆடிப் பாடி மகிழ்வேன். எ.று.
அப்பனை - ஞானசம்பந்தர் காலத்து திருவோத்தூரில் இருந்த அந்த ஆண் பனைமரம். இப்பனை - அவர் பாடியருளிய பின் பூத்துக் காய்க்கும் பெண் தன்மை உடையதாகிய பனை மரம். சிவிகை - முத்துச் சிவிகை. அமர்ந்தவன் - ஊர்ந்தவன். திருவரத்துறையில் ஞானசம்பந்தர் முத்துச் சிவிகை பெற்ற வரலாறு இங்கே குறிக்கப் பெறுகிறது. திருநாவுக்கரசரை அப்பரே என்று ஞானசம்பந்தர் அழைத்த சிறப்பு நிகழ்ச்சி புலப்பட, “சிவிகை அமர்ந்தவன் சொல் அப்பன்” என்று குறிக்கின்றார். சமணர்களால் கல்லொடு பிணித்துக் கடலில் கிடத்திய திருநாவுக்கரசரது வரலாறு இங்கே நினைக்கப்படுகிறது. இப்பாட்டில் அப்பனை என்ற ஒரு சொல்லே வேறு வேறு பொருளில் வருவதால் இது சொற்பின் வருநிலை என்னும் அணியாம். (77)
|