5373. மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன்மட்டில்
யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன்
போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற
சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே.
உரை: உமாதேவியை இடப்பாகத்தே கொண்ட தேவாமுதம் போல்பவனே! மாணிக்க மணியை ஒப்பவனே! என் வாழ்நாள் வீணே கழிகின்றது; ஐயோ! நின்னுடைய சிவபோகத்தைப் பொருந்துவதற்குரிய தந்திரத்தை யான் அணுவளவும் அறியேன்; என்னிடத்தில் நின் திருவுள்ளம் என்ன கருதுகின்றதோ? யான் அறிகிலேன்; இந்த அறியாமைக்கு என்ன செய்வேன்; நின்னுடைய இரண்டாகிய திருவடி தான் எனக்குத் துணை. எ.று.
உமாதேவியை இடப்பாகத்தில் உடைய பெருமானாய் உயிர்களின் பிறவிப் பிணிக்கு மருந்தும் அமுதமுமாய் விளங்குவது பற்றிச் சிவ பெருமானை, “மாதோர் புடை வைத்த மாமருந்து” என்று போற்றுகின்றார். வாழ்நாள் கணந்தோறும் கழிந்து கொண்டிருப்பது பற்றி வருந்துகின்றாராதலின், “போதோ கழிகின்றது அந்தோ” என்று புகல்கின்றார். சிவத்தைப் பொருந்துதற் கமைந்த நுண்ணிய நெறியைத்தாம் அறிந்திலாமை விளங்க, “நின்றன்னைப் பொருந்துகின்ற சூது ஓர் அணுவும் தெரியேன்” என்று அவலிக்கின்றார். பாதத் துணை - இரண்டாகிய திருவடி. எனக்கு நின் திருவடியல்லது நினது திருவுள்ளத்தையும் நின்னை அடைதற் கமைந்த நுண்ணிய அறிவும் துணை எனத் தெரிவித்தவாறாம். (78)
|