தர
தரவு கொச்சகக் கலிப்பா
5374. ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம்
சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள் ஆணை
நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும்
ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை.
உரை: நிறைந்த திருவருள் ஞானமாகிய பெருஞ்சோதி அப்பனாகிய சிவனே! எளியவனாகிய நான் என்னைச் சேர்ந்தவர்கள் சொர்ந்த முகத்தோடு வருவதைப் பார்க்க எப்போதும் துணிய மாட்டேன்; இது நின் திருவருள் ஆணையாகச் சொல்வது; என்பால் வந்தவர்கள் வந்தபோது அவர்கள் மனம் கனிந்துரைக்கும் வார்த்தைகளையும் செவியேற்று என் உள்ளத்தில் கொள்ளத் துணியேன்; இதுவும் உன் திருவடி ஆணையாகச் சொல்வதாம். எ.று.
ஆர்தல் - நிறைதல். அருட் பெருஞ்சோதியாகிய இறைவன் அருள் ஞானமே உருவாக உடைய ஞானத் தந்தையாதலால், “அருட்பெருஞ் சோதி அப்பா” என்று பரவுகின்றார். துன்பத்தால் தாக்குண்டு மனம் உடைந்து வருந்துபவர்களைப் பார்க்குமிடத்து என் மனமும் முகமும் சோர்ந்தொழிவதால், “அடுத்தவர்தம் சோர்ந்த முகம் பார்க்க இனித் துணியேன்” என்று இசைக்கின்றார். வந்தவர்கள் காலமும் இடமும் நோக்கிக் காரிய சித்தியின் பொருட்டு நெகிழ்ந்துரைக்கின்றாராதலின் அவர்கள் உரைப்பனவற்றை நான் செவியில் ஏற்பதில்லை எனத் தெளிவித்தற்கு, “நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும் ஓர்ந்து செவி புகத்துணியேன்” என்று உரைக்கின்றார். தாம் கூறுவனவற்றின் மெய்ம்மையை வற்புறுத்துவதற்கு, “நின் அருள் ஆணை” என்றும், “உன் ஆணை” என்றும் பன்முறையும் எடுத்துரைக்கின்றார். ஓர்தல் - செவியால் உணரக் கேட்டல். (79)
|