5375.

          அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும்
          ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே
          வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும்
          இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே.

உரை:

     அம்பலத்தில் எழுந்தருளுகின்ற தந்தையாகிய சிவனே! என்றும் பொன்றாத சிவயோக நிலை யாதோ? அதனை அடைந்து நின்பால் அன்பு செயும் நெறியினின்றும் நீங்காமல் நின்னைப் பாடியும் நின்று ஆடியும் உலகியல் வழியிலே நன்னெறியாகிய பல்வகை உயிர்களுக்கும் யான் இனியது செய்து விளங்குதல் வேண்டும்; இதனை என்னை இழித்துப் பொருள் செய்யாமல் அருளுதல் வேண்டும். எ.று.

     சிவனுடைய என்றும் பொன்றாத நிலை “அழியா நிலை” எனப்படுகின்றது. அதனை அடைதற்குரிய நெறி சிவன்பால் அன்பு செய்து இடையறவின்றி ஆடியும் பாடியும் பரவுதலாதலால், “அன்பினோடும் ஒழியாது உனைப் பாடி நின்று ஆடி” என்றும், உலகியலில் சன்மார்க்க நன்னெறியாவது எல்லா உயிர்கட்கும் இதமானவற்றைச் செய்து விளக்கமுற வேண்டும் என்பதாகலின், “உலகினூடே வழியாம் உயிர்க்கு இன்பம் புரிந்து வயங்கல் வேண்டும்” என்றும் இயம்புகின்றார். இவை யாவும் இறைவன் திருவருளாலன்றி அமைவதில்லையாதலால், “இழியாது அருள்வாய்” என்று வேண்டப்படுகிறது. எல்லா உயிர்க்கும் இன்பம் புரிந்து வயங்குவது சன்மார்க்க நன்னெறி என அறிக.

     (80)