5376.

          கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின்
          றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம்
          அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே
          துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே.

உரை:

     ஞான சோதியை உடைய திருநடம் புரிகின்ற சிவபெருமானே! கரும்பு போல் இனிக்கின்ற சொற்களைப் பேசும் சிறுமைத் தன்மை உடையவர்களின் கல் போன்ற மனத்தோடு பலகாலும் பழகி இரும்பு போன்ற மனத்தை யான் உடையவனாயினேன்; இங்கே உலவுகின்ற ஏழை மக்களின் பொறுத்தற்கரிய பசி நோய்க்கு மருந்தாகிய உணவளிக்க விரும்புகின்றேன்; ஆனால் ஐயோ, இங்கு என்னால் ஒரு துரும்பசைக்கவும் முடியாமல் இருக்கின்றேன்; என் செய்வேன் எ.று.

     கரும்பு போல் இனிக்கின்ற சொற்கள் உடையவராயினும் கல்போன்ற மனம் உடைமையால் சிறுமைத் தன்மை உடையராயினார் என்றற்கு, “கரும்பசைக்கும் மொழிச் சிறியார்” என்று கூறுகின்றார். அச்சிறியவர்களோடு பலகாலும் பயின்றதனால் இரும்பு போலும் மனம் உடையவராயினேன் எனப் புகல்வாராய், “கல் மனத்தில் பயின்று பயின்று இரும்பசைக்கும் மனம் பெற்றேன்” என்று உரைக்கின்றார். ஏழைகள்-அறிவும் ஆற்றலும் இல்லாதவர்கள். நோய்க்கு மருந்தாதலின் உணவை, “அரும்பசிக்கு மருந்து” என்று இயம்புகின்றார். தமது ஆற்றல் இன்மையை “என்னாலே துரும்பசைக்க முடியாதே” என்று சொல்லுகின்றார், ஆகவே உன் அருளினாலன்றி யான் இம்மக்களின் பசி போக்க மாட்டாது வருந்துகின்றேன் என்பது குறிப்பெச்சம்.

     (81)