அறுச
அறுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5377. மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய்
திருத்தாளை வழுத்தல் இன்று
பதிக்களவா நலந்தருவல் என்றுநினை
ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ
விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங்
கென்கின்றாய் விரைந்த நெஞ்சே
பொதிக்களவா முன்னர் இங்கே
சத்தத்துக் களவென்பார் போன்றாய் அன்றே.
உரை: நெஞ்சமே! நீ இங்கே பிரமனால் அளக்க முடியாத உன்னுடைய சித்திகளைக் காட்டுவாயாக என்று அவசரப்படுகின்றாய்; சுமைக்கு வேண்டும் பொருளை அளப்பதற்கு முன்பே வண்டிக் கூலியை நோக்கி அளந்து கொள் என்பாரைப்போலப் பேசுகின்றாய்; அறிவுக்கு எட்டாத அழகிய அம்பலத்தில் திருநடம் புரிகின்ற இறைவனுடைய திருவடிகளை வணங்கி வாழ்த்துவோமாயின் இப்பொழுது இவ்விடத்தவரால் அளந்து காண முடியாத நலன்களைத் தருவேன் என்று இறைவனை ஏத்துமாறு உனக்கு நான் கட்டளை இடுகின்றேன்; என்னே எனது அறியாமை இருந்தவாறு. எ.று.
உயிரறிவால் அளந்து காண முடியாது என்றற்கு அம்பலத்தை, “மதிக் களவா மணிமன்று” என்று சிறப்பிக்கின்றார். பதி என்றது ஆகுபெயராய் மக்களைக் குறிக்கின்றது. பிரமதேவனாலும் அளந்தறிய முடியாத கன்ம யோக ஞான சித்திகளை “விதிக் களவா சித்திகள்” என்று விளம்புகின்றார். பொதி - மூட்டைகள். பொருள் கிடைப்பதற்கு முன்பே முடைக்கு வண்டிக் கூலி கேட்டு அளந்து கொள் என்று உரைப்பது அறியாமை என்பதாம். சத்தம் - வண்டிக் கூலி. (82)
|