5378. ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் யாவரிங்கே அவர்க்கே இன்பம்
கூடியதென் றாரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும் வார்த்தை
ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் பற்பலவாய் உன்னேல் இன்னே
பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் இன்புலகப் படிகண் டாயே.
உரை: அம்பலத்தின்கண் ஆடி அருளுகின்ற சிவபெருமானுடைய திருவடித் தாமரைகளுக்கு அன்பு செய்பவர் யாவரோ அவர்களுக்கு இவ்வுலகில் இன்பம் உளது என்று வேதங்களும் ஆகமங்களும் அறுதியிட்டுக் கூறுகின்ற சொற்களை மறந்தொழிந்தாயோ? நெஞ்சமே! நீ எண்ணுவது யாது; பலவற்றை எண்ணி வருந்துவதை ஒழிக; இப்பொழுதே அப்பெருமானுடைய திருப்புகழைப் பாடுக; பாடிய அப்பாட்டைப் படிப்பாயாக; அதுவே இன்ப உலகத்தை எய்துவதற்கு வழிமுறையாகும் காண். எ.று.
நடராசப் பெருமானுடைய திருவடிகளில் அன்புடையவர் யாரோ அவர்களுக்கே இவ்வுலகிலும் மறுமை உலகிலும் எல்லா உலகிலும் இன்ப வாழ்வு எய்தும் என்று வேதங்களும் ஆகமங்களும் எடுத்துரைக்கின்றன என்பது கருத்து. அதனால் அவனுடைய திருப்புகழ் பொருளாகப் பாட்டுக்களை இயற்றி அவற்றை மேன்மேலும் படித்தல் வேண்டும் என்பதாம். இன்ப உலகத்தை அடைவதற்குப் படி முறை இது என வலியுறுத்தவாறாம். (83)
|