எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5379.

     ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த
          வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால்
     நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி
          நாதனைக் கண்டவன் நடிக்கும்
     மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல
          மருந்துகண் டுற்றது வடிவாய்
     நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே
          நெஞ்சமே அஞ்சலை நீயே.

உரை:

     சிவத்தோடு ஒன்றுதற்கு முன்பு எண்ணத்தால் எண்ணி அறிய கிடைத்த குணங்களுக்கெல்லாம் மேலாகத் தன்மை அருள் ஞான ஒளியால் மிகவும் கண்டு அங்கே விளங்குகின்ற அருட்பெருஞ் சோதியாகிய தலைவனைக் கண்டு அவன் நடிக்கின்ற அம்பலத்தைக் கண்டு அதன்கண் சித்துக்கள் எல்லாவற்றையும் செய்ய வல்ல மருந்தாகிய கூத்தப் பெருமானைக் கண்டு அவன் திருவடி அடைந்து அதுவே வடிவமாக நின்று கொண்டு திருக்கூத்தாடும் தருணம் இதுவாதலின் நெஞ்சமே நீ இனி அஞ்சுதல் வேண்டா. எ.று.

     ஒன்றுதல் - பொருந்துதல். ஒன்று முதல் எட்டு வரையில் எண்ணக் கிடந்த எண் குணங்களையும் அவற்றிற்கு மேலாகவுள்ள அனந்த கல்யாண குணங்களையும் ஏற்றவனாதலால், “ஒன்று முன் என்பால் எண்ணிடக் கிடைத்த உவைக்கும் ஏற்றன்” என்று இயம்புகின்றார். உவை - இடையில் உள்ளவை. அருள் ஞான ஒளியால் அருட்சோதி ஆண்டவனைக் காண்டல் வேண்டும் என்பாராய், “அருள் ஒளியால் அருட் பெருஞ் சோதி நாதனைக் கண்டு” என்று உரைக்கின்றார். காரிய யோக ஞான சித்திகளின் உருவாய், பிறவி நோய்க்கு மருந்தாய் விளங்குதல் பற்றிச் சிவனை, “சித்தெல்லாம் வல்ல மருந்து” என்று சிறப்பிக்கின்றார். சிவபெருமான் திருக்கூத்தாடும் திருவம்பலத்தைக் காணும் சீவன் தானும் சிவமாய்த் திருக்கூத்தாடும் என்பது விளங்க, “அது வடிவாய் நின்றுகொண்டு ஆடும் தருணம்” என இயம்புகின்றார்.

     (84)