5380. கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
கருணையங் கண்ணது ஞான
நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
நின்றது நிறைபெருஞ் சோதி
மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
வயங்குவ தின்பமே மயமாய்த்
தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
தனித்தெனக் கினித்ததோர் கனியே.
உரை: இன்ப மயமாய்த் தலையாய இடத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் தனிநின்று ஆடி எனக்கு இன்பம் செய்வதாகிய சிவக்கனி, நிவிர்த்தி முதலிய கலைகள் விளங்கும் முடியை உடையதும், என்னை ஆண்டு கொண்டருளும் கருணை நிறைந்த கண்களை யுடையதும், ஞானயோக நெறியின்கண் நிற்கும் மெய்ப்பொருளாவதும், உலகவர் எல்லாரும் போற்றித் துதிக்க விளங்குவதும், நிறைந்த பெரிய சோதியாகிய மலை போல்வதும், திருவருள் ஞானவெளியின் நடுவே சிவமாய் விளங்குவதும், இன்ப மயமாய் இருப்பதுமாகும், எ.று.
நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அதீதை என்ற ஐவகை கலைகளை விளங்க நிற்பது பற்றிச் சிவக் கனியை, “கலை வளர் முடியது” என்றும், ஞான நிலை வளர் பொருளாவது சிவதரிசன சிவரூப சிவயோகங்களுக்கப்பால் சிவபோகம் நல்கும் மெய்ப்பொருளாய்த் திகழ்வதால் சிவனை, “ஞான நிலை வளர் பொருளது” என்றும் புகழ்கின்றார். மலை போல்வதால் சிவபெருமானை, “நிறை பெருஞ் சோதி மலை” என்று போற்றுகின்றார். சிதாகாசம் எனப்படும் அருள் ஞான வெளியின் நடுவே சிவயோகிகள் காண நிற்பது பற்றி, “அருள் வெளி நடுவே வயங்குவது” என்றும், “இன்ப மயமாய் இருப்பது” என்றும் எடுத்துரைக்கின்றார். (85)
|