5381. மன்னுள்நின் றாடும் வள்ளலே எனது
வள்ளல்என் றெனக்குளே தெரிந்த
அன்றுதான் தொடங்கி அம்மையே அப்பா
ஐயனே அப்பனே அரசே
என்றுநின் தனையே நினைத்திருக் கின்றேன்
எட்டுணை எனினும்வே றிடத்தில்
சென்றுநின் றறியேன் தெய்வமே இதுநின்
திருவுளம் தெரிந்தது தானே.
உரை: அம்பலத்தில் நின்று ஆடுகின்ற வள்ளலாகிய கூத்தப் பெருமானே! எனது வள்ளல் என்று எனக்குள்ளே தெரிந்துகொண்ட நாள் தொடங்கி அம்மை என்றும் அப்பன் என்றும் ஐயன் என்றும் அன்பம் என்றும் அருளரசு என்றும் உன்னையே நினைத்துக் கொண்டு இருக்கின்றேன்; எள்ளத்தனையும் வேறிடம் சென்று நான் நின்றதில்லை; எனக்குத் தெய்வமாகிய சிவனே! எனது இவ்வியல்பு நினது திருவுள்ளம் இனிது தெரிந்ததன்றோ? எ.று.
வள்ளல்-வேண்டும் வரங்களைத் தருபவன். நின்றனையே நினைத்திருக்கின்றேன்; நின்னையே வள்ளலாகிய பெருமான் என்று இடையறாமல் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்; வேறு தெய்வங்களை எண்ணி எவ்விடத்தும் நான் சென்றதில்லை என்பாராய், “வேறிடத்தில் சென்று நின்று அறியேன்” என்று விளம்புகின்றார். (86)
|