5382.

     உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்
          உறுபசி உழந்துவெந் துயரால்
     வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
          மற்றிதை நினைத்திடுந் தோறும்
     எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும்
          எரிகின்ற தென்செய்வேன் அந்தோ
     கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்
          குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்.

உரை:

     வள்ளலாகிய பெருமானே! எனக்குத் தந்தையே! செல்வம் உடையவர்களை நான் நினைப்பதில்லை; வறுமையால் வாடுகின்றவர்கள் உணவின்றி வெறும் பசியால் வருந்தி வெவ்விய துயர்களால் வருந்தவும் காண்பது பொருத்தமாகுமோ? இந்நிலையை நினைக்கும் போதெல்லாம் நான் அவர்களை இகழ்வதில்லை? அவர்களை நினைக்குந் தோறும் என் மனமும் உடம்பும் எரிகின்றது; யான் யாது செய்வேன்; உண்ணும் உணவையும் உட்கொள்ள இயலவில்லை; அவர்களைக் காண என் உயிரும் தாங்குகின்றதில்லை; இந்தக் குறைகள் எல்லாவற்றையும் போக்கியருளுக. எ.று.

     உடையார் - செல்வமுடையார். உறுபசி - மிக்கபசி. உள்ளுதல் - நினைத்தல். வறியவர்கள் பசியால் உழன்று வருந்தவும் உள்ள இந்நிலை பொருத்தமாகுமோ. ஆகாதன்றோ? என உரைப்பினும் அமையும். எள்ளுதல் - இகழ்தல். எங்கள் சமுதாயத்தில் இவ்வாறு நிறைந்திருக்கும் குறைகளைப் போக்கி யருளுக என வேண்டுகின்றாராதலால், “இந்தக் குறையெலாம் தவிர்த்து அருள்” என்று கூறுகின்றார்.

     (87)