அறுச
அறுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5383. ஐவகைத் தொழிலும் என்பால் அளித்தனை அதுகொண் டிந்நாள்
செய்வகை தெரிவித் தென்னைச் சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும்
பொய்வகை அறியேன் வேறு புகலிலேன் பொதுவே நின்று
மெய்வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே.
உரை: படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் என்பால் அளித்துள்ளாய்; அது கொண்டு இக்காலத்தில் அவற்றை யான் செய்யும் வகையைத் தெரிவித்து என்னோடு கலந்து நீ ஒன்றாய் இருத்தல் வேண்டும்; யான் பொய் சொல்லும் திறம் உடையவன் அல்லன்; எனக்கு உன்னைத் தவிர வேறு புகலிடமும் இல்லை; நடுநிலையில் நின்று உண்மையை உரைத்துள்ளேன்; இந்த என் விண்ணப்பத்தைக் கண்டருளுக. எ.று.
ஐவகைத் தொழில்களாவன : படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பனவாம். சீவன் தன்னைச் சிவம் எய்திய வழிச் சிவத்துக்குரிய ஐவகைத் தொழிலும் செய்யும் உரிமை உடையனவாம் என்பது பற்றி, “ஐவகைத் தொழிலும் என்பால் அளித்தனை” என்று கூறுகின்றார். அத்தொழில் ஐந்தையும் சிவம் போலச் செய்யும் திறம் இல்லாமை தெரிவிக்க, “இந்நாள் செய்வகை தெரிவித்து என்னைச் சேர்ந்து ஒன்றாய் இருத்தல் வேண்டும்” என முறையிடுகின்றார். புகல் - புகுமிடம். பொது - நடுவு நிலை. இது உயிரின் உண்மை நிலையாதலால், “மெய்வகை உரைத்தேன்” என்று கூறுகின்றார். (88)
|