5384. உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்
ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள் என்றும்
எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.
உரை: பிரமன் முதலிய உருவுடையவர்கள் ஆகியும், நாத விந்து முதலிய அருவுருவினராகியும், சதாசிவன் ஆகிய உருவருவினராகியும் கடவுள் ஒருவரே உள்ளான்; இதனை யறிந்து கொள்வீராக; மெய்யுணர்வின்றி இருவராம் என்றும், மூவராம் என்றும், இயலுகின்ற ஐவர்கள் என்றும் வீணராய் உரைத்து வருந்துவது எதற்காக? உடலுக்கு உயிர் இரண்டென்றும் மூன்றென்றும் சொல்லலாகுமா? எ.று.
பிரமன் திருமால் உருத்திரன் மகேசுவரன் ஆகிய நால்வரையும் உருவுடைய மூர்த்திகள் என்றும், சிவம் சத்தி நாதம் விந்து ஆகிய நாலும் அருவ மூர்த்திகள் என்றும், சதாசிவத்தை உருவருமூர்த்தி என்றும் கூறுதல் உண்மையின் இவ்வாறு கூறுகின்றார். உலகத்தவர்கள் சிவம் சத்தி இருவரே கடவுள் என்றும், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருமே கடவுள் என்றும் உரைக்கின்றார்கள். அது உடம்பில் இருக்கும் உயிர் இரண்டென்றும் மூன்றென்றும் கூறுவது போலாம். எருவர் - வீணர். (89)
|