கட

கட்டளைக் கலித்துறை

5385.

          சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற
          தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்
          காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
          நாய்போல் குறைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.

உரை:

     சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த நல்லோர்கள் உலகிலுள்ள உயிர்களை எல்லாம் தாம் பெற்ற பிள்ளைகள்போல எண்ணியும் தம்மைப் பெற்ற தாய் போலக் கருதியும் நலம் புரிவார்கள்; துன்மார்க்கர்கள் பிறரைக் கண்டால் இந்த உலகத்தில் சொல்லப்படுகின்ற எட்டிக்காய் போல கசந்து கடுகடுத்து நாய் போல் குரைத்து ஏசுவர். எ.று.

     சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தவர் பிற உயிர்களைத் தாம் பெற்ற பிள்ளைகள்போலக் கருதித் தாயன்பு செய்வர் என்றும், துன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நாய் போல் குரைத்துப் பிறரை ஏசிக் கடிவர் என்றும் இதனால் கூறியவாறாம். எட்டிக்காய் - மிகவும் கசப்புடைய ஒரு காய்.

     (90)