எண

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5386.

     வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம
          வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
     கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்
          கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
     பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே
          பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்த்திடுவான் புகுந்தே
     விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை
          வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே.

உரை:

     வண்டு மொய்க்கின்ற பூக்களைச் சூடிய கூந்தலையுடைய எங்கள் தாயாகிய சிவகாமவல்லியுடன் அழகிய அம்பலத்தில் விளங்குகின்ற நின்னுடைய வடிவத்தைக் கண்டு களித்தவரைப் பார்த்து மகிழ்ந்த மக்களின் திருவடித் தாமரைகள் பிரமன் முதலிய மூன்று தேவர்களின் அழகிய திருமுடியில் அணிந்து கொள்கின்ற மணம் மிக்க மலர்களாம் என்பதாயின், பண் அமைந்த பாட்டுக்களைப் பாடும் நின்னுடைய தொண்டர்களின் திருவடிப் பெருமையை யாவர்தான் எடுத்துரைப்பார்; வேதங்கள் யாவும் அப்பெருமையை எடுத்துரைக்கப் புகுந்து கெட்டழிந்து வெளுத்து விட்டன; அதுவேயன்றி அவ்வேதங்களைப் புகழ்ந்துரைக்கும் வேதியர்களும் தமது உள்ளுடம்பு பயனின்றி வெளுத்தொழிந்தன. எ.று.

     உமாதேவியை இங்கே சிவகாமவல்லி என்று உரைக்கின்றார். கனமுடி - பெருமை பொருந்திய தலை. கடிமலர் - மணம் மிக்க பூ. பண்டகும் திருத்தொண்டர் - பண் அமைந்த பாடல்களைப் பாட வல்ல சிவத் தொண்டர்கள். வேதங்களால் முற்ற எடுத்து மொழியலாகாமை விளங்க, “மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்து விண்டுலர்ந்து வெளுத்த” என்று விளம்புகின்றார். பிளவுற்றுக் கெட்டுச் சருகுகளாய் வெளுத்தன என்பாராய், “விண்டுலர்ந்து வெளுத்த” என்று கூறுகின்றார். உள் உடம்பு - உடலுக்குள் உயிரைத் தன்னுள் கொண்டிருக்கும் புரியட்டக தேகம்.

     (91)