5387. கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
உரை: கீழ்த் திசையும் இருள் நீங்கிற்று; கருணை உருவாகிய அருட் சோதி என்னும் ஞான சூரியன் எழுந்து விட்டது; என்னுடைய மனமாகிய தாமரையும் மலர்ந்து விட்டது; என்னிடத்தே படிந்திருக்க சழக்குத் தன்மையும் நீங்கி விட்டது; சாதி உணர்ச்சியும் பிரமசரியம் முதலிய ஆச்சிரம ஆசார உணர்ச்சியும், சமய உணர்ச்சியும், அதற்குரிய ஆசார உணர்ச்சியும், ஒன்றோடொன்று பிணங்கிச்சண்டை இட்டுக் கொண்ட கலக வழக்குகளும் நீங்கிப் போயின; பலவாகிய பொய் நிறைந்த நூல்களைக் கற்றவர்களின் மனமும் பசையின்றி வெளுத்து விட்டது; அவர்கள் வாயும் வெளுத்து வாய் உலரும்படி வாதம் புரிந்த அவர்களுடைய முழக்கங்களும் முடிந்தொழிந்தன; சிவமே பொருள் என்று கொள்ளும் சன்மார்க்கமாகிய நன்னெறியைக் காட்டும் மேலான ஓசையையுடைய முரசும் முழங்குகின்றது எ.று.
கிழக்கு என்றது கீழ்மையாகிய தன்மை. வெளுத்தல் - கெட்டழிதல். உளக் கமலம் - மனமாகிய தாமரை. சழக்கு - எடுத்தற் கெல்லாம் மறுப்புரைக்கும் தன்மை. பிரமசரியம், இல்வாழ்வு, வானப் பிரஸதம், சந்நியாசம் என்ற நான்கும் ஆச்சிரமம் எனப்படும். சாதி சமயம் முதலியவற்றிற்கு உரிய ஒழுக்கம் ஆசாரம் எனப்படுகிறது. பொய்ந் நூல்கள் - பொய் புனைந்து எழுதப்பட்ட சாத்திரங்கள். பரநாத முரசு - மேலான முழக்கத்தையுடைய வெற்றி முரசு. (92)
|