5389.

          நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன்
          யாதிற் பெரியேன் தீதிற் பெரியேன்
          என்னைஆண் டருளினை என்னைஆண் டவனே
          அம்பலத் தாடல்செய் எம்பெரும் பொருளே.

உரை:

     என்னை ஆண்டு கொண்ட பொருமானே! அம்பலத்தில் ஆடல் புரிகின்ற பெரிய பொருளாகியவனே! நாயினும் கடைப்பட்ட சிறியவனாயினும் ஒருவகையில் யான் பெரியவனாவேன்; எதனால் பெரியவன் என்றால் குற்றம் புரிவதில் நான் பெரியவன்; அங்ஙனமாகவும் என்னை நீ ஆண்டு கொண்டருளினாய்; உன் அருள் இருந்தவாறு என்னே. எ.று.

     நாயினும் கீழ்ப்பட்ட சிறுமை யுடையவன் எனத் தம்மை இழித்தற்கு, “நாயினும் சிறியேன்” என்று தெரிவிக்கின்றார். மிகுந்த அளவில் குற்றம் புரிபவன் என்பது புலப்பட, “தீதிற் பெரியேன்” என்று தெரிவிக்கின்றார்.

     (94)