New Page 2

நேரிசை வெண்பா

5390.

          உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான்
          வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு
          சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம்
          இத்தருணம் சத்தியமே என்று.

உரை:

     பெருமானே! எனக்கு மெய்ம்மை நிலையைச் சொல்லி அருள் என்று வேண்டினேன்; எனக்குத் தந்தையும் தலைவனுமாகிய குருபரன் வளவிய சொற்களால் என் அறிவில் நன்கு பதியுமாறு வன்மை பொருந்திய சித்தி நிலைகள் அனைத்தையும் இத்தருணத்தில் சத்தியமாகத் தெரிவிக்கின்றோம் என்று கூறினார். எ.று.

     உண்மை நிலை - உண்மை எனப்படுகிறது. பிரான் - தலைவன். குருபரனாதலால் அவனது அன்பின் தன்மையும் தலைமையும் புலப்பட, “எந்தை பிரான்” என்று இசைக்கின்றார். சித்தி நிலைகள் மூன்றும் மிக்க வலிமை உடையவாதலால், “திண்மையுறு சித்தி நிலை” என்று உரைக்கின்றார். சித்தி நிலை - கன்ம யோக ஞான சித்தி நிலைகள்.

     (95)