5391.

          உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
          இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
          நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
          தானே எனக்குத் தனித்து.

உரை:

     நம் பெருமானாகிய சிவபெருமான் தனிநிலையில் என்பால் எழுந்தருளி உலகினர் எல்லோரும் போற்றும்படி நான் ஒளி வடிவுடையவனாக விளங்கும்படி எனக்கு அருள் புரிந்தான்; அதற்கு யானும் மனமுவந்து யாரும் என்னைத் திலகன் என்னும்படி நானே சன்மார்க்கத்தை நடத்துகின்றேன். எ.று.

     உலகமெல்லாம் என்றது, எல்லா உலகங்களையும் குறித்தது. ஒளி வடிவம் - ஞான ஒளி திகழும் உருவம். ஒளி வடிவுடையனாய் ஓரிடத்தே ஒடுங்கி இராமல் உலகத்தவர் எல்லாரும் கண்டு வியந்து மகிழச் செய்தான் என்றற்கு, “ஒளி வடிவினாகி இலக அருள் செய்தான்” என்று கூறுகின்றார். திலகன் - தலையாயன்.

     (96)