5392. தணித்துணையாய் என் றன்னைத் தாங்கிக்கொண் டேன்றன்
மனித்த உடம்பழியா வாறே கனித்துணையாம்
இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி
தன்னையுந்தந் துட்கலந்தான் றான்.
உரை: ஒப்பற்ற துணைவனாய் என்னை உலகியல் மயக்கில் வீழாத படி என்னைத் தாங்கிக்கொண்டு என்னுடைய மனித உடம்பும் அழியாவண்ணம் இனிய மாங்கனியை நிகர்க்கும் இனிய அமுதத்தைக் கொடுத்து எல்லாம் செயல் வல்ல சித்திகளையும் தந்து எனக்குள் கலந்து கொண்டான். எ.று.
தனித் துணை - ஒப்பற்ற துணைவன். உலகியல் மயக்கில் வீழ்ந்து கெடாதபடி என்னை ஆதரித்தருளினான் இறைவன் என்றும், அதனால் யான் என் மனித உடம்பு கெடாதபடி ஞான அமுதத்தைத் தந்தருளினான் என்றும், அதன் பயனாய் யான் எல்லாச் சித்திகளிலும் வல்லவனாயினேன் என்றும் கூறியவாறாம். அந்நிலையில் அப்பெருமான் என்னுட் கலந்து கொண்டான் என்பாராய், “தந்து உட்கலந்தான் தான்” என மொழிகின்றார். (97)
|