5393.

          சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக்
          கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க
          இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான்
          இனியான் மயங்கேன் இருந்து.

உரை:

     நூல்களின் வாயிலாகக் கற்கும்தோறும் இனிமைச் சுவை நல்குபவனும் அருட் சோதியையுடைய எந்தையுமாகிய சிவபெருமான் எனக்குச் சர்க்கரைபோல் இனிக்கின்றான்; தன்னுடைய திருவருளை எனக்குத் தந்தருளினான்; மேலும் என் மனமாகிய கல்லைக் கரைத்துருகச் செய்து என் மனம் களிக்குமாறு செய்தருளினான்; அதனோடு எனக்குள்ளே புகுந்தருளினான்; ஆதலால் இனிமேலும் இவ்வுலகில் இருந்து மயங்க மாட்டேன். எ.று.

     தன் திருவருளைத் தந்து கல் போன்ற என் மனத்தைக் கரையச் செய்து என்னை மகிழ்வித்தான் என்பாராய், “எனக்கே அருள் தந்தான்; என் மனக்கல் கரையச் செய்து களிப்பித்தான்” என்று உரைக்கின்றார். அப்பெருமான் என்னுள் கலந்து கொண்டானாதலால் யான் உலகியல் மாயையால் அறிவு மயங்க மாட்டேன் என்று தெளிவித்தற்கு, “எந்தை என்னுள் உற்றான் இனி யான் இருந்து மயங்கேன்” என்று இயம்புகின்றார்.

     (98)