5394.

          உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான்
          என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும்
          வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக்
          குண்மைஇன்பம் செய்தும் உவந்து.

உரை:

     எங்கள் பெருமானாகிய சிவனே! இனியும் உன்னை நான் நீங்க விடமாட்டன்; இது நான் உனது ஆணையாகச் சொல்வதாகும்; எங்கள் பெருமானாகிய நீயும் என்னை நின்னிடமிருந்தும் நீங்குமாறு விடமாட்டாய்; நாம் இருவருமாய் நிலையாய் இருந்து எல்லா வளமைகளையும் தர வல்ல வாய்மை பொருந்திய திருவருளைத் துணை கொண்டு உலகத்தவர்களுக்கு மனமுவந்து இன்பம் புரிவோமாக. எ.று.

     இறைவனுடைய திருவருள் எல்லா வளங்களையும் வல்லமைகளையும் உடையதாகலின் அதன் துணைமை இன்றியமையாது என்பது குறித்தற்கு, “வண்மை எலாம் வல்ல வாய்மை அருளால்” என எடுத்துரைக்கின்றார். மன்னுதல் - நிலைபெறுதல். உண்மை இன்பம் - எக்காலத்தும் உளதாகும் மெய்யின்பம்.

     (99)