கட
கட்டளைக் கலித்துறை
5395. நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே
பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே
மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா
பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே.
உரை: கடல் விடத்தை உண்டு தேவர்கள் முதலிய எல்லா உயிர்களையும் காத்தருளிய பெருமானே! அம்பலத்தில் திருநடம் புரிகின்ற தலைவனே! செம்பஞ்சு சூட்டிய சிறிய பாதங்களை உடைய பாவை போன்ற உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனே! பராபரனே! மஞ்சு படிகின்ற சிவந்த சடையையுடைய அருளரசே! பொன்னம்பலத்தை உடையவனே! எல்லாம் வல்லவனே! துவர்க்கும் பிஞ்சினை உண்ட வாய்க்கு இனிய பழம் தருவதுபோல எனக்குத் திருவருள் இன்பம் தந்து ஆண்டு கொண்ட பெரியவனே! வணக்கம். எ.று.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த காலத்து அதன்கண் எழுந்த விடத்தை உண்டு தேவர்கள் முதலிய பன்னுயிரையும் சிவன் காத்தருளினான் என்ற வரலாறு கருதி, “நஞ்சுண்டு உயிர்களைக் காத்தவனே!” என்று நவில்கின்றார். கங்கையாறு தங்கி இருத்தலால் மஞ்சு மேகங்கள் படிந்திருக்கும் சிவனுடைய சடையை, “மஞ்சுண்ட செஞ்சடை” என்று புகழ்கின்றார். எல்லாம் செயல் வல்லவனாதலின், “வலவாய்” என்று கூறுகின்றார். உலகியல் நுகர்வுகள் இங்கே பிஞ்சு என்றும் திருவருள் இன்பம் பழம் என்றும் குறிக்கப்படுகின்றன. பிஞ்சு-முற்றாத இளங்காய். (100)
|